^பேசும் கவிதைகள்^

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.



Raju

காதல் சண்டே

உன்னிடம் சண்டைபோடும் நாளா சண்டே?
காதல் மொழி பேசும் நாளா சண்டே?

இன்டர்நெட், சாட் என்று கும்மி அடித்தோம்
ஹோட்டல், பப் என்று சுற்றினோம்

மல்டிப்ளெக்ஸ் அனைத்தும் பார்த்துவிட்டோம்
மால்கள் அனைத்தும் அளந்துவிட்டோம்

அடல்ட்ஸ் என்ன குழந்தை என மொழி பேசி
காதல நினைவுகள் பருகினோம்

வேலை காரணம் நாம் பிரிந்தாலும்
ஊர் மாறினாலும் மறக்கமாட்டேன் என்றாய்

இருந்தாலும் என்னை மறந்துவிட்டாயா தோழி
சண்டே எனக்கு பிறந்த நாள்!

--

SUREஷ்

சண்டேன்னா

இப்படித்தான்..,

சிவப்பு மெத்தையில்...

--

இய‌ற்கை

ஹை....நாளைக்கு ச‌ண்டே ஜாலிடே..
என்ஜாய் என‌ச் சொல்லும்
மேட்டிக்குடி ம‌க‌ன் உன‌க்குத் தெரியுமா
என் ச‌ண்டேக்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம்
ப‌சி போக்கும்,
ஒரு வேளை ச‌த்துண‌வும் கிடைக்ககாத‌ நாள்
யூனிபார்ம் ஆடையின் கிழிச‌ல்க‌ளுக்கு
ஒட்டுப் போடும் நாள்
அடுத்த‌ மாத‌ப் ப‌ரிட்சைக்குள் பேனா வாங்க‌,
ச‌ம்பாதிக்கும் நாள்..

--

sakthi

ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட‌
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது

இப்பொழுது
காதல் எனும்
பெயரில் உதிக்கும்
இனக்கவர்ச்சி
இளையவர்களிடம்

--

திகழ்மிளிர்

கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
கணவன்
தாரம்
மற்றும்
பசங்கள் சேர்ந்தயுடன்.

.........................

உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................

--

சுழியன்

இன்று உனக்காக நானடி!"
-----------------------------

நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...

ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...

இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...

கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த‌ அரைகுறை சமையல்...

தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த‌ ஐஸ்க்ரீம் சினிமா...

...............

எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,

மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ

தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்

--

அமுதா

சிலிர்க்கின்றது இதயம்
காதல் பூக்கள் மின்ன
ஞாயிறு உதயம்..


Raju

வாக்குறுதிகள் நிறைவேறுமா ?

அவீங்க வந்துட்டு போனாங்க
வாக்குறுதி எல்லாம் கொடுத்தாங்க
இன்னும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்
நாம் காத்திருக்கணுமா?

--

கோவி.கண்ணன்

ஆடுமாடுகளுடன் ஓய்வெடுக்கும்
பழைய செருப்பு !

--

அதிஷா

எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல

வட்டியில்லா க்கடனும்
காடு வந்து போகல

ஓயாம உழச்சாலும் காசு வீடு வந்து சேரல

கையெல்லாம் காய்ச்சாலும் கஞ்சி காச்ச முடியல

விவசாயம் பண்ணி பொழைச்ச
மக்க!

வயித்து பசியில காஞ்சு
கிடக்க!

வந்துட்டானுங்க ஆட்டிட்டு
த்தூ

ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு

யாருக்காக காத்திருக்கேன்

பாதையத்தான் பாத்திருக்கேன்

உலகத்துக்கே விடிஞ்சாலும்

சூரியன்தான் உதிச்சாலும்

எலை தழைங்க துளிச்சாலும்

என்சோட்டு சாதி சனம்

வாழ்க்க மட்டும் விடியலியே

--

குசும்பன்

நல்ல மாட்டுக்கு ஒரு
சூடுன்னான் பெரியவன்
இந்த மாடு இனி உதவாதுன்னான்
சின்னவன்!
இனி வாழ்கை இந்த மாட்டோடு!

--

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

மகன் ,
டாக்டர்
சென்னையில்...
பேரன் ,
சாப்ட்வேர் இஞ்சினியர்
டெக்சாசில்...
நான்,
இன்னும்
கிராமத்திலேயே...
சல்லிவேர்கள்
தள்ளிப் போனாலும்
அங்கேயே இருக்கும்
ஆணிவேர்ப் போல...
விழுதுகள்
விலகிச் சென்றாலும்
விலகாத
ஆலமரத்து அடிமரம் போல...

--

கார்க்கி

கவிதை..

பொருளாதார மேதைகளால்
பந்தாடப்பட்ட
பரங்கிப்பேட்டை
பச்சமுத்து
பதறினார்..

என்னது? மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா?

--

மங்களூர் சிவா

திரும்பவும்
காங்கிரஸ் ஆட்சியா
மிஞ்சுமா
கோவணம்?

--

sakthi

எனை விட்டு எங்கு சென்றாய் என்னவளே
என் உள்ளத்து உணர்வுகளை கொன்றவளே

ஊர் முழுவதும் அந்நியாமாகிவிட
உன் நினைவுகள் மட்டுமே துணையாய்

என் எளிய தோற்றம் கண்டு
எள்ளி நகையாடும் கூட்டம் அறியுமா???

உண்மையான வாழ்வின் அர்த்தம்
ஊதாரித்தனங்களால் வாழ்வின்
உண்மையை தொலைத்த கூட்டம் எனை பரிகசிக்க‌

ஒங்கி நிற்கும் இந்த மரமும்
ஒற்றை மாடுமே எனக்கு இப்போது ஆறுதலாய்....

--

Blogger மின்னல்

காலணி போல் நானும்
======================
உன் நிழிலிலாவது என்னை
விட்டு இருக்கலாமே

இது கண்டிப்பா உரைநடை தான். கவிதைன்னு நினைச்சி படிக்க வேண்டாம். அந்த பெரியவரின் காலணி பேசுவது போல்....

என் வாழ்கை
=================
கண்களில் கவலையும்
நாளையேனும் விடியுமா கனவும்
காலணி கூட பாரமாக.

--

திகழ்மிளிர்

.........................

உறவு இருந்தும் துறவு ...

...........................

மாடு இருக்கிறது
உழவனாய் உழுது கிடக்க...
வீடு இருக்கிறது
கிழவன் நான் இருக்க...


இத்தனையும் இருந்து என்ன ?
எத்தனை நாள் நான் இருப்பேன் ?

இங்கே மாடும் வீடும்
என் சொந்தங்களாய் ...
எங்கே போயின
என் பந்தங்கள் எல்லாம் ...

மண்ணை நேசித்தது
மாபெரும் குற்றமா ?
எனை விடுத்து
எங்கே சென்றாய் என் மகனே ...

தினமும்
வேர்வையில் குளித்து,
பார்வை பூத்து,
வாசலில் தவமிருகின்றேன். மகனே
வருவாய் நீ என !

பயிரை அறுவடை செய்த எனக்கு
உயிரை அறுவடை செய்யும்
கலை தெரியாததால்,
கண்ணீரில் கரைகின்றேன் ...
உறவு இருந்தும்
துறவு தான் முதுமையிலே
என உணர்கின்றேன்.

--

Kirpal A V said...

மின்ன
என் அண்ணன் தம்பிகளோட
கருவேலங்காட்டுக்குள்ள
'ஒரு கட்டுச் சுள்ளியில
ஒரு சுள்ளி கோண சுள்ளி,
ஒரு கட்டுச் சுள்ளியில...' ன்னு
சொல்லிக்கிட்டே சுள்ளி பொறுக்கயில
சத்தமில்லாம மேலேறி
உச்சியத் தொட்டுருவார் சூரியனார்.

வெயில் படாம நிழல்ல நின்னு நின்னு
ஓடுறவன் பயந்தாங்கொள்ளி!
வெயில்கால் புழுதிபட ஓடிப்போய்
ரெட்டமாட்டுக் கட்டவண்டி தொத்துரவன் வலுத்தவன்!

ரெட்டமாட்டு வண்டி தொத்தி
பொறுக்கி வந்த சுள்ளிக
கல்லுக்கூட்டுக்குள்ள சடசடக்க,
பொங்கச்சோறு பானையில
பொங்க நிக்க,
கட்டவண்டியோட கட்டிவச்ச ஆட்டுக்கிடா
மே... மே... ங்க
முறுக்கு மீசக்கி நடுவுல
புன்னகையா பூரிச்சு நிப்பான் கருப்பராயன்.

இன்னக்கி
கேஸ் அடுப்புல கறி வேகுதாம்!
பேரம் பேத்திக வீடியா கேம் ஆடுதாம்!
இன்னமும்
பூரிச்சுப் புன்னகையாத்தான் நிக்கறான் கருப்பராயன்!

--

Gowripriya

புன்புலம் தினமுழுது
புடைத்திருக்கும் உன்
புறங்கைச் சிரைகளுக்குள்
புகுந்து பார்த்தோ..

பொசுக்கும் வெயில் மறுக்க..
புன்னகையின் நரை மறைக்க..
கார்முகில் காணாத
காற்றின் பசலை மொழி
காது தீண்டாதிருக்க..
நீயணிந்த பாகைக்குள்
நுழைந்து நோக்கியோ...


பாடுபொருள் தேடத்
தேவையிருக்கவில்லை என்
கவிதைக்கு..
மருதம் பிறழ்ந்து பாலையாதலின்
மாபெரும் வேதனையுன்
விழிமுனையில் மொழியற்று
வீற்றிருக்கையில்..

முதல் போட்டியில் வந்த கவிதைகளுக்கு திரு.ஜ்யோவரம் சுந்தரின் விமர்சனம்.

அந்தப் பதிவில் ரவிஷங்கரின் கவிதையும், முத்துக்குமரனின் கவிதையும் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கின்றன (மண் மீது கரையும் மழைக் கனவுகள் - என்ன அருமையான படிமம்!).

தமிழன் - கறுப்பி, கும்க்கியின் சில வரிகள் பளிச்சிடுகின்றன. மற்றபடி கவிதைகளாக ஆகவில்லை. அஷோக் சொல்ல வருவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தரையைத் தறை எனக் கவிதையில் எழுதினால் எரிச்சல்தான் வருகிறது :(


ஸ்ரீமதி

தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

--

லோகு

உன்னை பிரிந்து விட்ட துக்கத்தில்
வானத்து தேவதைகள் எல்லாம்
கண்ணீர் விட்டு அழுகின்றன..
உன் பிறந்தநாள் தோறும் மழை..

--

ஜோதிபாரதி

விட்டு விட்டது மழை
விடவில்லை தூவானம்
நாற்றமடிக்கிறது
கிடை தண்ணீர்
எப்பொழுது வ(வி)டியும்

--

தமிழ் பிரியன்

என் நினைவுகளைப் போலவே
கலங்கலாக இருக்கும்
புது மழையின் தூறல்களே!
உங்களுக்குத் தெரியுமா?
நானும் ஒருநாள் உங்களைப்
தெளிவாகவே வந்திறங்கி
இப்பூமியில் இருந்தேன்.

--

Thamizhmaangani

உனக்காக
காத்திருக்கும்பொழுது
மழைத்துளிகளை ரசிக்கிறேன்
உன் கன்னக்குழிகளின்
ஞாபகம் வருவதால்

--

நான் ஆதவன்

என் வீட்டு வாசலில் பார்த்தபோது
எனக்கு வந்தது ஆத்திரம்
எவனோ பெய்த -த்திரத்திற்கு....

--

G3

காதலியை
காண வரும் காதலனாய்
உனக்கு முன் பூமிக்குவந்த
நீர்த்துளிகளை தேடி
ஆனந்தமாய் கலக்கிறாய் !!

மேகத்துடன் சண்டையிட்டு
வெளிநடப்பு செய்கின்றன
மழைத்துளிகள் !!!

--

மின்னல்

1.
துளியென விழுந்தாய்
நீரலையாய் நகழ்ந்தேன்.

2.
என் அமைதியை
துளித்துளியாய் சிதைக்கின்றாய்
துவானமாய் நீ விழுந்து

3.
தூரல் புள்ளிகள் சுற்றி
வட்ட வட்ட கோலங்கள்

--

கே.ரவிஷங்கர்

தலைப்பு: கல்லெறிந்தவர்கள்

6வது வகுப்பில் கெளசல்யா
8வது வகுப்பில் ராதா
பிளஸ் ஒன்னில் கேத்தரின்
கல்லூரி முதல் வருடத்தில் ரம்யா
மூன்றாவது வருடத்தில் ஜானவி
முடிக்கும் போது (டெல்லி) ஷ்ருதி
இந்த மொசைக் குளத்தில்
கல்லெறிந்து விட்டுப்
போனவர்களின்
நினைவுகள் கலையாமல்
சங்கு சக்கரமாக
அங்கங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது
கடைசியாக கல்லெறிந்து
கல்யாணம் ஆகிக்
கலைந்துப் போன
என் மனைவியின்
பெரிய சக்கரத்தைச்
சுற்றி


--


குசும்பன்


இராவுல முட்ட முட்ட
குடித்த பீரு
ஓடுது ஆறா
ரோட்டுல!


--


Subha


இறைவா..
எங்கள் கண்ணீரை உன்
அபிஷேகத்துக்குக் காணிக்கையாக்குகிறோம்..
மனம் இறங்கி எம் குல
மக்களின் அல்லலைத்
துடைக்க வா
சீக்கிரம்..
கண்ணீர்த்துளி சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..
அது வெள்ளமாகி எங்களைக்
கொல்லுமுன் வந்துவிடு!


--


sakthi


உன் அன்பு மழையில்
நனைய வந்தால்
நீயோ வசவு மழையில்
வருத்தப்படுத்துவாய்

அப்போதும்
தூவானத்தின் தூரல்களும்
சில்லென்ற சாரல்களும்
சுடும் நீ இல்லாத போழ்துகளில்


--


அன்புடன் அருணா


அடுத்த துளிக்காகக்
காத்திருக்கும்
குட்டிக் குட்டி
வட்டக் கிண்ணங்கள்!!!

வானம் முகம்
பார்த்துக் கொள்ள
விடாமல் இதென்ன?
மழைத் துளிகள்
முந்திக் கொண்டன!!!

வட்டத்துக்குள் வட்டம்
நீருக்குள் மழைத்துளி
இதென்ன???
பூமிக்குள் வானமா???


--


சூர்யா ௧ண்ணன்


திடீரென பெய்த மழையென
நீ வந்தாய்! இன்று
எஞ்சிய மண் வாசனை
நெஞ்செல்லாம்..,


--


Monks


இதுவரை விழுந்த
மொக்கைகளுக்குப் பின்
இன்றைய கவிதைத்துளிகளாய்
நீர்


--


vaasal


இந்த ஓர் மழைத்துளியைப் போன்றது தான் உன் பார்வையும்
என் மனக் கூட்டில் உள்ள
பட்டாம் பூச்சிக் கூட்டத்தில் கலந்து சிறகடிக்கிறது !


--


லவ்டேல் மேடி


ஒரு துளி மலையில்
உருவாகிறது பல வளையங்கள்
- இது அண்ணன் தங்கை போல
ஒன்றுடன் ஒன்று கலக்காத அன்பு.

ஆனால் இவ்வளையங்கள்
மற்ற துளியில் வரும் வளையங்களுடன்
ஒன்றோடு ஒன்று கலக்கும்
- இது உறவுக் காதல்.


--


Maddy


என் மனக்குளத்தில்
பட்டு தெறித்து
விநாடி பொழிதில்
வீரியம் குறைந்தன
வீணாக வந்த
வளைய கவலைகள்!!!


--


முத்துகுமரன்


மண் மீது
கரையும்
மழைக் கனவுகள்


--


மங்களூர் சிவா


கண்ணிலிருந்து
பெரும் மழை
புது மனைவி வைக்கும்
சாம்பார்


--


D.R.Ashok


தறை நனைத்து
எந்த அழகி போட்ட
ஆறு புள்ளி கோலமிது


--


மதிபாலா

எப்போதும் ஓயாத அலைகள்

இப்போது ஓய்ந்து போயின.

சீக்கிரம் உன் முகத்தைக் காட்டிவிடு.

சீரியஸ்ஸான சத்யாகிரகமாம் இது.!

***

மழைத்துளி கிளப்பிய அலைகள்

மனதுக்குள் மெல்லிய தென்றல்.

கடற்கரையில் மட்டும் தானா காற்று?

--

கும்க்கி

ஒரு துளியின் அழைப்பில்
விட்டு விடுதலை ஆகின்றோம்
நாம்

எல்லா கசடுகளிடனிருந்தும்
அப்போதைக்கு விடுதலை!

சூழ்நிலையின் போக்கு குறித்த,
எந்தவொரு சலனங்களுமில்லை மனதில்..

வாழ்வும் அதன் போக்குகளும் குறித்தான
கவலையற்று இருக்கின்றோம்
சில மணித்துளிகளேனும்..

மழையும் நனைவதுவும்
ஈடுபார்க்கவியலாது இன்னபிற
அனுபவங்களுடன்..

செடிகளும் கொடிகளும் மரங்களும்
இன்னபிற ஜீவராசிகளும்
உணர்ந்த அளவிற்க்கேனும்
மழை உணர்ந்த மனிதருண்டோ

எந்த ப்ரதி பலனுமின்றி
எல்லா உயிரையும் உய்விக்க வந்த
மழை குறித்த
செய் நன்றி இல்லை இங்கு யார்க்கும்

சேமிக்க இருந்த இடமும்
சுருங்கி வருகிறதிப்போது

காலத்தின் நாம் காலங்கடந்து
போயிருப்பினும்
இயற்கையின் கருணையின்றி
வாழ்க்கையில்லை
என உணர்வதெப்போது...

--

நட்புடன் ஜமால்

என்னை பற்றிய

உன் நினைவலைகள்

உன்னை பற்றிய

என் கனவலைகள்

இன்னும்

கலங்கலாய்...

--

கோவி.கண்ணன்

துளி முத்தங்கள்,

அத்தனையும் வெட்கங்களாக விரிகிறது!


--


பூர்ணிமா சரவணக்குமார்

மழை ஓய்ந்த பின்

முற்றத்து வீட்டின்

ஓடுகள் தவற விடும்

மழைத் திவலைகளை

கைகளில் பிடித்து

விளையாடுகையில்,

பிடறியில் விழும் அடி

ஒரு நாளும் வலித்ததில்லை!

ஆ.......வென்று துடிக்கும்

என் நாடகத்தை

அம்மா....

நிஜமென்று தான்

நினைத்திருக்கிறாள்!!

இன்றும் அதேபோல் விளையாடுகையில்,

விழாத அடியின்

வலி தாங்காமல்

தடவிப் பார்த்து

அலறுகையில் அலைந்து

அரற்றுகிறது கண்கள்!!!

--

இய‌ற்கை

தொடுவானில் இணைந்திருந்த‌

மேக‌க் காத‌ல‌னின் பிரிவால் உண்டான‌ பூமி ம‌க‌ளின்

முக‌ச்சுருக்க‌ம்

--

சென்ஷி

ஒரு பூ கிடைத்திருக்கலாம்
மறுப்பின்
கிளை விட்டிருக்கலாம்
மனம் தொட்டு அதிரவைத்து
விலகி ஓடும்
வரம்புகளுக்குள்
மழைத்துளி பட்டு
நீர்த்து கலையாமல் அலைகிறது
கோல முத்திரைகள்

--

எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!
--
நேற்று கரடியாகவும்
இன்று முயலாகாவும்
நாளை வேறு ஏதாகவும்
குழந்தைக்கு காட்சி தரும்
புகைப்படத்தில்.
ஒரே கவலை
அலையும் நீரில்
கப்பல் விட முடியாதது
மட்டுமே!
--
மெலிதாய்
இதழ் விரிக்கத்தொடங்கி
சப்த சிரிப்புகளில்
சுத்தமாய் மறைந்திருந்தது
குவளைப்பூ போன்றதொரு
மழையின் துளியும்
--
எத்தனை உயரத்திலிருந்து
விழுந்தாலும்
குழந்தையை சிரிக்க வைத்த பின்பே
மறைகிறது
தூறல் பொம்மைகள்
--
அடிவானம் தொட்டுவிட்ட
ஆசையில் அலைகிறது
மேகங்கள்
நீரலையாய்
--
உன் விழிகளிலிருந்து
இடம் தவறி
அலைகின்ற கண்ணீர்ப்பூக்கள்
தொட்ட வடிவமானதா
எப்படி சூட்டுவது
--
உனக்காக பெய்த மழையை
சேகரித்தும்
அதற்காக கவிதைகள் எழுதியும்
விடிகிறது பொழுது
அலையின் வடிவங்கள்
மனங்கள்தோறும்
--
குறிப்பார்த்து விழுந்த கல்லாக
நீர்த்துளி பட்டு
சிதறிய தண்ணீர்
நீ துளி பார்த்ததும்
சிதறும் நானாய்
--
பாதச்சுவடு படாமல்
குதிகாலை தூக்கி
கால் விரல்களால்
நடந்து போகிறாய்
கோலம் போட்டுக்கொண்டுவிட்டது
தண்ணீர்
--
ஒரு மழைக்கால இரவின்
ஆரம்பத்தில்
கொடுத்த முத்தம்
தீராமல்
தன் தடயங்களை பத்திரப்படுத்தியுள்ளது
நீ சென்ற பிறகும்
--
காதல் சின்னமாக
பத்திரப்படுத்த துடிக்கிறது
மனசு
நீ நனைந்த மழையை
சேகரிக்க
--
அத்தனை மழையிலும்
என்னை மூழ்கடித்து
நனையாத வெளிச்சமாய்
நகர்ந்து செல்கின்றது
என் மீதான உன் காதல்
--
மதுக்கோப்பை வடிவில்
காதல் பூத்திருந்தது
அடர் சிவப்பு வர்ணம்
நீர்த்திருந்ததில்
மிதந்து போனது
அவள் மழையில் நனைந்த அழகு
--
மழையுடன் உறவாடுதல்
எளிதாகி விட்டது
அரிதாகக் கிடைத்திருக்கும்
உன் பிரிவுக்காலத்தில்
--
தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்
--

தமிழன்-கறுப்பி...

நேற்று பெய்த மழையில் இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர் சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...
--
மூன்று வருடங்களுக்கு பிறகு நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின் மழை நேரப் பின்மதியங்களையும்.
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!
--
எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற தாழ்வாரத் தூவானங்களில் தெறித்தலைகிறது உன் முகம்
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?
--
வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம் மறக்கப்பட்டு விட்டதையும்..
--
வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள் தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,
வந்து விடு அல்லது மழையை கூட்டிப்போய்விடு!
--
நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில் வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில் நிகழந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழையும்,
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

--

Nithya Subramanian

அதோ பாரு தண்ணி
அதுல குதிச்சா வரும் ஜன்னி
ஹே டண்டனக்கா ..
ஹே டண்டனக்கா ..